×

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற சென்னை மாநகராட்சியில் 4 நாட்களில் 5,30,572 விண்ணப்பங்கள் விநியோகம்: 2260 பயோமெட்ரிக் மிஷின்கள் ஏற்பாடு

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், கடந்த 4 நாட்களில் சென்னை மாநகரில் மட்டும் 5,30,572 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இதற்கான, விண்ணப்பங்கள் விநியோகம் முழு வீச்சில் நடந்து வருகிறது. அந்த வகையில், இதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாம்கள் சென்னை மாநகராட்சி பகுதிகளில் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது. தாய்மார்கள் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி 148வது வார்டுக்குட்பட்ட மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வரும் முகாம்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மக்கள் பாதிக்கப்படாத வகையில் விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் முகாம் முதற்கட்டமாக கடந்த 24ம் தேதி முதல் அடுத்த மாதம் 4ம் தேதி வரையும், இரண்டாம் கட்ட முகாம் 5ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பதிவேற்றம் செய்யாமல் விடுபட்டவர்களை இணைக்க 17-8-23 முதல் 28-08-23 வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாமில் பொதுமக்கள் வசதிக்காக 2,260 பயோமெட்ரிக் மிஷின்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 1,730 தன்னார்வலர்களும், உதவி தன்னார்வலர்களும், தலைமை அலுவலர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாநகரத்தில் இதுவரை கடந்த 4 நாட்களில் 5,30,572 படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதில் 2,01,050 படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உரிமைத் தொகையை பொறுத்தவரை ஏற்கனவே யார், யாரெல்லாம் தகுதியானவர்கள் என்பது தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. 1 கோடி பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பிறகு சம்பந்தப்பட்டவர்களே விண்ணப்பத்தை தவிர்த்து உள்ளனர். ஏழை, எளிய மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும்தான் ஆயிரம் ரூபாய் பெரிது. எனவே உழைக்கும் வர்க்கம், ஏழை மக்களுக்கு தான் ஆயிரம் ரூபாய். ஆயிரம் ரூபாய் யாருக்கு பெரிதாக தெரிகிறதோ அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது பகுதி திமுக துணை செயலாளர்கள் எம்.ஏ.செந்தில்சுரேஷ், தீ.பாலாஜி, வட்ட செயலாளர்கள் எஸ்.ரமேஷ்ராஜ், எஸ்.ஜி.மாதவன், எம்.ரூபன், ப.ஆலன் மற்றும் திமுக நிர்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமையும் அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா, மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி, சென்னை மாநகராட்சி மண்டலக் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல அலுவலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற சென்னை மாநகராட்சியில் 4 நாட்களில் 5,30,572 விண்ணப்பங்கள் விநியோகம்: 2260 பயோமெட்ரிக் மிஷின்கள் ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Chennai Municipal Corporation for Women ,Chennai ,Chennai Municipal Corporation for Artist ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...